உடலோடு ஆன்மா முடிச்சிட்டுக் கொள்ளாதிருப்பது எவ்வளவு நலம். அது ஏன் வாய்க்கப் பெறுவதில்லை. உடலையும், ஆன்மாவையும் பிணைக்கும் சக்தியாக மனம் ஏன் செயல்படவேண்டும். இந்தப் புறமும், அந்தப் புறமும் மல்லுக்கட்ட இந்த மனம் ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறது. குளிர்ந்த தரையில் புரண்டு படுத்தேன். பகல் நேர சூரியக் குளியலில் சூட்டுக் கொதிப்போடு தகிக்கும் தரை, இரவில் நிலவின் பொழிச்சலில் தன் தன்மை மாறி குளிர்ந்துவிடுகிறது, நானா அது என்பதுபோல...
வாசலில் வந்தமரும் காகத்தின் மீதூரும் வெயில்... இப்படியாக கதைகளை எழுத மிகுந்த விருப்பமாக உள்ளது. அது வளர்கிறது, வளர்ந்து கொண்டே போகிறது. ஒன்றை கவனித்ததை, ஒரு வலியை அனுபவித்ததை எழுதுவது எளிதில் கைகூடி விடுகிறது. பேனாவிலிருந்து எழுத்துகள் உருண்டோடி வெள்ளைத் தாளை நிரப்பி ஆசுவாசமடைகின்றன. அப்படியாக கதைகள் பிறக்கின்றன. என் மனதிற்கு நெருக்கமான கதைகள்...படிப்பவர்கள் மனதில் அமரும் கதைகள். என் பார்வையிலிருந்து தப்ப முடியாத மனிதர்கள் என் கதைகளின் மாந்தர்களாகி அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்கள். ஃ புள்ளியில் வரும் கீதா ஆன்ட்டி அதற்கு ஒரு உதாரணம். கதைகள் எழுத எவ்வளவு விருப்பமோ அதே அளவு வாசிப்பதிலும் விருப்பம் உள்ளது. ஒரு புத்தகமும், சில மழைத்துளிகளும் போதும் என்னை குதூகலப்படுத்த. கதைகளை வீட்டின் எந்த மூலையிலும் அமர்ந்து என்னை மறந்து வாசிப்பேன். அதனால்தான் என்னால் ஓரளவு எழுதவும் முடிகிறது என்று தோன்றுகிறது. - ஐ. கிருத்திகா
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more